Saturday, December 12, 2009

Kadavul venpaakkal

ஒளியெலாம் நின்றாலும் ஓரழிவு வந்தாலும்
பாழோர் நரகமே தான்சென்று விட்டாலும்
கேட்கட்டும் நம்செவி நாதனின் நாமம்
நமச்சிவாயஞ் சொல்லட்டும் நாவு!

காண்பவை உண்மையோ காட்சிதான் மாயமோ
காண்பவன் நானேயோ நானென்ப தாரோ
உலகுதான் என்கொலோ உண்மையென் பதுள்ளதோ
அறிகிலேன் நமச்சிவா யனே!

ஆசைகள் போக அகங்காரம் நீங்கிட
வாழ்வினில் என்றும் தெளிவே நிலைத்திட
இன்பதுன்பம் தந்திடும் பாடம் அறிந்திட
தேவியைப் போற்றுவோம் நாளும்!

ஆசையே அழியுமே வேண்டுதல் வேகுமே
மேகலை போகுமே மேனியும் சாகுமே
தானென்று நின்றதே மண்ணிலே போகுமே
காலனே வந்த நாளில். 


தெளிவாய் இருந்திடு தேடி மெய் கண்டு
பணிவாய் இருந்திடு பேரொளி கண்டிடு
அன்புதான் கொண்டிரு ஆசையை நீக்கிடு
ஆனந்தம் தருமந்த வாழ்வு!

Kaadhal venpaakkal

பார்ப்பவை யாவிலும் உன்முகம் காண்கிறேன்
கேட்பவை யாவுமே உன்குரல் ஆகுதே
புலன்கள் நிறைத்தாய் உயிரில் கலந்திட்டாய்
காதலில் நோகுதே உள்ளம்...


 என் பேர் மறந்திட்டேன் ஏதும் அறிகிலேன்
உன்முகம் அல்லாது வேறொன்றும் பார்த்திலேன்
கண்ணிலே நிற்கிராய் கண்மணி நீயடி
என்னிலும் நேசித்தேன் உன்னை!


மொழியில்லை சொல்லில்லை ஓர்பொருளும் இல்லை
இருளில்லை காணவோர் ஒளியும்தான் இல்லை
பகலில்லை நித்திரைக் கோரிரவும் இல்லை
கண்ணே உனைக்கா ணாது.


(இவை மூன்றும் சில வருடங்கள் முன்பு   (காதல் என்றால் என்ன என்று அனுபவிப்பதற்கும் முன்பு!!) நான் வைத்திருந்த வேறோர் வலைத்தளத்தில் எழுதியவை. எனக்குத் தெரிந்த ஒரே 'formal' தமிழ்க் கவிதை வடிவம் வெண்பா மட்டுமே, அதையும் கொலை செய்திருக்கலாம், செய்திருப்பின் மன்னித்து சுட்டிக் காட்டவும்.)

Monday, June 29, 2009

Sakiye...

"உன் தவத்தை யாம் மெச்சினோம்!
என்ன வரம் வேண்டும் உனக்கு?"
கண்முன்னே கடவுள் தோன்றி,
கண்மணியே, என்னிடம் கேட்டாரடி!

சந்தோஷத்தில் மனம் களிக்கும் போதும்
சருகாய் சோகத்தில் உருகும் போதும்
சமமாய்ப் பகிர்ந்திட ஒரு மனம் கேட்டேன்
சகித்துக் கொள்ள ஒரு துணை கேட்டேன்...

வரமாய் நீ வந்தாய்,
வெளிச்சங்கள் பல தந்தாய்;
வாழ்க்கை எனும் வானத்தில்
வானவில்லாகி நின்றாய்.

வசந்தங்கள் பல வந்தன,
வலிகளும் கூடவே வந்தன!

பிணைக்கும் நம் காதலை
பிணிகள் தொடாது காப்போம் கண்ணே...

சுவர்கள் நமக்குள் எழுந்து விட்டால்
சுவடு தெரியாமல் உடைப்போம் அவற்றை.

மதில்கள் நம் மனங்களுக்கு நடுவில் எழுந்தால்
மதி கொண்டு அவற்றைச் சிதைப்போம் பெண்ணே..

மனித மனங்கள் முட்காடுகள் அன்பே; அதனால்தான்,
புனிதமான காதலதில் ஒன்றாய் அவை கலக்கையில்
முட்கள் குத்தி ரணங்கள் உருவாவதும்,
கற்கள் பட்டுக் கண்ணாடி மனம் தூளாவதும்.

முட்களும் கற்களும் கொடுத்திடும் வலிகளை
முத்தான காதலுக்காய் முழுவதும் பொறுப்போமா?
வருத்தங்கள் ஆயிரம் வந்திட்ட போதிலும்
வெறுப்பொன்று அண்டாமல் விழிப்பாகக் காப்போமா?

தென்றல் வீசும் சொர்க்கம் சேர்ந்திட
தேகம் எரியும் நரகம் தாண்ட வேண்டும்
தேகம் எரியும் நரகத் தொல்லையும் நம் காதலின்
வேகம் கொண்டு விரைவாய்க் கடப்போமா?

சந்தோஷத்தில் மனம் களிக்கும் போதும்
சருகாய் சோகத்தில் உருகும் போதும்
சமமாய்ப் பகிர்ந்திட ஒரு மனம் கேட்டேன்
சகியே, உனையே துணையாய்க் கேட்டேன்!

Sunday, April 19, 2009

அரசியல்

'டீ கொண்டு வர இத்தனை நேரமா?'
பளீரென விழுந்தது அறை
பன்னிரண்டு வயது பாலகனுக்கு;
குழந்தைத் தொழில் ஒழிப்புக்கான
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்!

கணக்கு

ஒன்றும் ஒன்றும் மூன்று என்றிருந்த
ஒன்றாம் வகுப்பு விடைத்தாள் கண்டு
நாணத்தோடு புன்னகை புரிந்தாள்
நான்கு மாதம் கர்ப்பமான கணக்கு டீச்சர்.

Monday, April 13, 2009

நிறமறியேன்...

செவ்வானத்தின் வண்ணம் கேட்டனர் என்னிடம்
சொல்லத் தெரியாது திகைத்து நின்றேன்...
நீலக்கடலின் நிறம் கூட இன்று
நினைவில் வர மறுத்ததடி கண்ணே!
பச்சைப் புற்களைப் பார்த்த பொழுதும்,
இச்சைக் காதலியே, இருட்டையே கண்டேன்...
என்னவள் நீ அருகில் இல்லாமல்
வண்ணங்கள் எனக்கு ஏதடி கண்மணி?