"உன் தவத்தை யாம் மெச்சினோம்!
என்ன வரம் வேண்டும் உனக்கு?"
கண்முன்னே கடவுள் தோன்றி,
கண்மணியே, என்னிடம் கேட்டாரடி!
சந்தோஷத்தில் மனம் களிக்கும் போதும்
சருகாய் சோகத்தில் உருகும் போதும்
சமமாய்ப் பகிர்ந்திட ஒரு மனம் கேட்டேன்
சகித்துக் கொள்ள ஒரு துணை கேட்டேன்...
வரமாய் நீ வந்தாய்,
வெளிச்சங்கள் பல தந்தாய்;
வாழ்க்கை எனும் வானத்தில்
வானவில்லாகி நின்றாய்.
வசந்தங்கள் பல வந்தன,
வலிகளும் கூடவே வந்தன!
பிணைக்கும் நம் காதலை
பிணிகள் தொடாது காப்போம் கண்ணே...
சுவர்கள் நமக்குள் எழுந்து விட்டால்
சுவடு தெரியாமல் உடைப்போம் அவற்றை.
மதில்கள் நம் மனங்களுக்கு நடுவில் எழுந்தால்
மதி கொண்டு அவற்றைச் சிதைப்போம் பெண்ணே..
மனித மனங்கள் முட்காடுகள் அன்பே; அதனால்தான்,
புனிதமான காதலதில் ஒன்றாய் அவை கலக்கையில்
முட்கள் குத்தி ரணங்கள் உருவாவதும்,
கற்கள் பட்டுக் கண்ணாடி மனம் தூளாவதும்.
முட்களும் கற்களும் கொடுத்திடும் வலிகளை
முத்தான காதலுக்காய் முழுவதும் பொறுப்போமா?
வருத்தங்கள் ஆயிரம் வந்திட்ட போதிலும்
வெறுப்பொன்று அண்டாமல் விழிப்பாகக் காப்போமா?
தென்றல் வீசும் சொர்க்கம் சேர்ந்திட
தேகம் எரியும் நரகம் தாண்ட வேண்டும்
தேகம் எரியும் நரகத் தொல்லையும் நம் காதலின்
வேகம் கொண்டு விரைவாய்க் கடப்போமா?
சந்தோஷத்தில் மனம் களிக்கும் போதும்
சருகாய் சோகத்தில் உருகும் போதும்
சமமாய்ப் பகிர்ந்திட ஒரு மனம் கேட்டேன்
சகியே, உனையே துணையாய்க் கேட்டேன்!
No comments:
Post a Comment